பகல் கொள்ளையடிக்கும் விஜய் மல்லையாவுக்கு ஒரு நீதி... விவசாயிக்கு ஒரு நீதியா? (வீடியோ)
ஒரு வீடியோ… பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. டிராக்டர் மேல் அமர்ந்திருக்கும் ஒருவரை, வலுக்கட்டாயமாக கீழே இறங்கச் சொல்லி போலீஸ்காரர்கள் காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபடுகின்றனர். டிராக்டரில் இருந்து இறங்க மறுத்து போராடுபவரை, ஒரு போலீஸ்காரர் காலைப் பிடித்து இழுத்து துன்புறுத்துகிறார். மற்றொரு போலீஸ்காரர் டிராக்டர் மீது ஏறி, அவரை பிடித்து கீழே தள்ளுகிறார். ஒரு கட்டத்தில் அவர் இறங்க மறுத்து போராடும் நிலையில், டிராக்டருக்குள்ளேயே வைத்து சரமாரியாக போலீசார் தாக்குதல் நடத்துகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, தரையில் தள்ளிவிட்டப் பிறகு, மற்றொரு போலீசார் அவரை அடித்தும், காலால் உதைத்தும், சட்டையைப் பிடித்து இழுத்துச் சென்றும் போலீஸ் வாகனத்தில் ஏற்றுகிறார். மனிதநேயம் இல்லாத, போலீஸாரின் செயல் எதற்காக? யார் இவர்? ஏன் இத்தனை களேபரம்?
தஞ்சாவூர் மாவட்டம் சோழவன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலன்தான் தாக்குதலுக்கு ஆளானவர். தனியார் வங்கி ஒன்றில் (கோடக் மகிந்திரா) விவசாய கடனில், டிராக்டர் வாங்கியிருக்கிறார். வங்கியில் பாலன் வாங்கிய கடன் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய். 8 தவணைகளாகத் திருப்பிச் செலுத்தும் வகையில் கடன் பெற்றிருந்த பாலன், அதில் 6 தவணைகளை கட்டிவிட்ட நிலையில், மீதமிருந்த 2 தவணைகளை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடன் கொடுத்த தனியார் வங்கி அதிகாரிகள், போலீஸாரின் உதவியுடன் அவரது வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளால் பேசியும், வழக்கு போடப்போவதாக மிரட்டியும் அடாவடியாக நடந்து கொண்டுள்ளனர். டிராக்டரை பறிமுதல் செய்ய வந்திருந்ததை அறிந்து டிராக்டரில் அமர்ந்திருந்த விவசாயி பாலன் மீதுதான் கண்மூடித்தனமாக போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
எஸ்.ஐ குமரவேல் தலைமையிலான போலீசார், இந்த அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர். ஊரே கூடி நின்று பார்க்கையில், ஒரு விவசாயியை மாபெரும் குற்றம் செய்தவர் போல் அவமானப்படுத்தி இழுத்துச் செல்வது எந்த வகையில் நியாயமாக இருக்கும்? நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயி வாங்கிய சொற்ப கடனுக்காக இப்படி கொந்தளிக்கும் வங்கியும், அவருக்கு துணைப் புரியும் போலீசாரும், பகல் கொள்ளையடிக்கும் பலரை விட்டுவிடுகிறது.
இதோ, இந்தியாவின் பிரபல மதுபான தொழிலதிபரான விஜய் மல்லையா பல வங்கிகளிடம் 7 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வாங்கி ஏப்பம் விட்டு, இந்திய அரசுக்கே டிமிக்கி கொடுத்துவிட்டு அல்லது இந்திய அரசு உதவியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றிருக்கிறாரே. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகளும், காவல்துறையும் என்ன செய்யும்? ஏழை விவசாயி என்றால் ஒரு நீதி? ஊரை அடித்து உலையில் போடும் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களுக்கு ஒரு நீதியா?
-ஜி.எஸ்.பாலமுருகன், மயிலாடுதுறை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக