மின்சாரம் தாக்கி ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பலி
தர்மபுரி மாவட்டம், வெண்ணாம்பட்டி நியூகாலனி பகுதியை சேர்ந்தவர் சுல்தான்கான் (வயது 46). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
இவருடைய நண்பர் ஜீலான். இவர் தர்மபுரி டவுன் பகுதியில் அதியமான்கோட்டை பைபாஸ் சாலையில் பேட்டரி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த கடையில் பிளக்ஸ் போர்டு அமைக்கும் பணி நடந்தது. அதை பொருத்தும் பணிக்கு உதவி செய்வதற்காக சுல்தான்கான் அந்த கடைக்கு சென்றார். அங்கு 2 பேரும் இரும்பால் செய்யப்பட்ட பிளக்ஸ் போர்டை பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கடையின் மேல்பகுதியில் சென்ற மின்சார கம்பி, எதிர்பாராதவிதமாக பிளக்ஸ் போர்டு மீது உரசியது.
அப்போது, அதன் மீது கை வைத்திருந்த சுல்தான்கான் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை உடனடியாக அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி சுல்தான்கான் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக