உங்கள் பகுதி செய்திகளை உடனடியாக உலகின் பார்வைக்கு அறியவைக்க தொடங்கப்பட்டதுதான் இந்த இதழ்.விரைவாக செய்திகளை அனுப்பி சரியான தீர்வினை பெற்றிட வேண்டுகிறோம்.

Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com - Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com -Whats App: 9629645932 - vrshankar2009@gmail.com

வெள்ளி, 10 மார்ச், 2017

உஷ்ஷ்ஷ்

*"அம்மாவுக்காக மண் சோரு தின்றதாக கதை விட்ட போலி விசுவாசிகள் எல்லாம் ஜெயிலில் களி தின்னப் போகிறார்கள்” என்று உற்சாகமாக சொன்னார் பி.எச்.பாண்டியன்.*

வருகிறது விசாரணை கமிஷன்
அதிமுகவில் உள்ள சசிகலா அணியின் முக்கியஸ்தர்கள் கலங்கிப் போயிருக்கிறார்கள்.
கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது என்று கூறும் மனுக்கள் மீது தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வருவது காரணம் அல்ல.
அந்த மனுக்களுக்கு நீங்கள் 27ம் தேதிக்குள் பதில் சொல்லுங்கள் என்று சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருப்பதுகூட காரணம் அல்ல.
ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறும் புகார்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டதாக வந்திருக்கும் தகவல்தான் சசிகலா முகாமில் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பன்னீர் செல்வம் முதல்வராக இருந்தபோது அத்தகைய ஒரு விசாரணை கமிஷனை மாநில அரசே அமைக்கும் என அறிவித்து இருந்தார். ஆனால், பன்னீருக்கு பதில் எடப்பாடி கே. பழனிசாமியை முதல்வரக்கி விட்டு சிறைக்கு போனார் வி.கே.சசிகலா. அதோடு விசாரணை கமிஷன் விவகாரம் முடிந்து போனதாக அவரும் அவரது ஆதரவாளர்களும் நினைத்தார்கள்.
அதனால்தான் செய்தியாளர்கள் அந்த விஷயத்தை தொட்டு கேள்வி எழுப்பிய ஊர்களில் எல்லாம், “அம்மாவின் மரணத்தில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. அப்போலோ ஆஸ்பத்திரி நிர்வாகமே சொல்லி விட்டது. லண்டன் டாக்டரும் விளக்கி விட்டார். எனவே, இதன் பிறகும் அந்த பிரச்னையை கிளப்புவது தேவையற்றது” என்று அமைச்சர்கள் எல்லோரும் பேசி வைத்த மாதிரி ஒரே குரலில் பதிலளித்து வந்தார்கள்.
ஆனால் ஜெயலலிதாவின் ஆவி,ஆன்மா அத்தனை சுலபத்தில் குற்றவாளிகளை விட்டுவிடும் என்று தோன்றவில்லை.
முன்னாள் முதல்வரின் மரணம் குறித்த மக்களின் சந்தேகங்களை போக்க விசாரணை கமிஷன் அமைத்தே ஆக வேண்டும் என்ற கோரிக்கை முன்னைவிடவும் பலமாக வரத் தொடங்கியது விட்டது, பன்னீர் செல்வம் அணியுடன் பிரதான எதிர்க்கட்சியான திமுக, போராட்டக் கட்சியான பா.ம.க ஆகியவையும் சேர்ந்து இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன.
”உடலை தோண்டி எடுப்பதாலோ விசாரணை கமிஷன் அமைப்பதாலோ ஜெயலலிதா என்ன உயிருடனா வந்துவிட போகிறார்?” என கேட்கும் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கும் தமிழக காங்கிரஸ் கட்சியும்கூட இந்த கோரிக்கைக்கு சாதகமாக இருக்கிறது. பொதுமக்கள் மனதில் எழுந்த சந்தேகங்களை போக்குவது அரசின் கடமை என்று இளங்கோவன் உள்ளிட்ட அக்கட்சியின் பொறுப்பான தலைவர்கள் அழுத்தம் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் ஜெயலலிதா மரணம் பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோர்ட்டுகளில் வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அவ்வாறு தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்தபோது, அப்போலோ ஆஸ்பத்திரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஆஸ்பிடல் நிர்வாகம், ஜெயலலிதா வேண்டாம் என சொன்னதால் அவரது புகைப்படமோ விடியோவோ மக்களுக்கு தரப்படவில்லை என கூறியது. அதே பதிலில் வேறொரு இடத்தில், ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த ஐசியு வார்டில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை எனவே விடியோ எடுக்கவில்லை என சொல்லி இருந்தது.
அப்போலோ ஆஸ்பத்திரியில் திரும்பிய பக்கமெல்லாம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பது அங்கு சென்று வந்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். மேலும், “எங்கள் ஆஸ்பத்திரியின் ஐசியுவில் அட்மிட் ஆன நோயாளிகளை உலகின் எந்த மூலையில் இருப்பவர்களும் இன்டர்நெட் மூலமாக பார்க்க முடியும். கம்ப்யூட்டர், லேப்டாப் அல்லது ஸ்மார்ட்போன் இருந்தால் போதும் நேரில் சென்று பார்ப்பது போல ஐசியுவுக்குள் நடப்பதை காண முடியும். நோயாளியுடன் தொடர்பு கொள்ள முடியும்” என்று நீண்டகாலமாக அப்போலோ ஆஸ்பத்திரி விளம்பரமே செய்து வருகிறது. VIRTUAL VISIT என பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த வசதியை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, ஜெயலலிதா விஷயத்தில் அப்போலோ ஆஸ்பத்திரி நிர்வாகம் வேண்டுமென்றே திட்டமிட்டு உண்மைகளை மறைக்கிறது என மக்கள் மத்தியில் சந்தேகம் வலுவடைந்தது.
மக்கள் மத்தியில் நிலவும் பல சந்தேகங்களுக்கு அப்போலோ ஆஸ்பிடல் விளக்கத்தில் பதில் இல்லை என்பது மருத்துவ உலகிலும் புதிய சந்தேகத்தை தோற்றுவித்தது. என்ன நிலைமையில் ஜெயலலிதா அப்போலோவுக்கு கொண்டு வரப்பட்டார் என்பதில் தெளிவு இல்லை. போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் ஜெயலலிதா திடீரென தாக்கப்பட்டார்; அப்போது அவர் மயங்கி விழுந்தார்; அதன் பிறகுதான் அப்போலோவுக்கு கொண்டு செல்லப்பட்டார் என வாட்சப்பிலும் ஃபேஸ்புக்கிலும் வலம் வந்த தகவல்கள் உண்மையாக இருக்கலாம் என அதிகமானவர்கள் நம்ப தலைப்பட்டனர்.
இதை தொடர்ந்து, நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தியே தீர வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உரத்த குரலில் கேட்க தொடங்கினர். இந்த கோரிக்கையை மாநில அரசு ஏற்கப் போவது இல்லை என்பதால் மத்திய அரசே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் அல்லது சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அவரது அணியை சேர்ந்த எம்.பி.க்கள் 12 பேர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் கடந்த செவ்வாயன்று டெல்லியில் ஜனாதிபதியை சந்தித்து மனு கொடுத்தனர். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடமும் இதே மனுவின் பிரதிகளை வழங்கி, கோரிக்கையில் உள்ள நியாயங்களை அவர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவசியம் ஆவன செய்வதாக டெல்லி தலைவர்கள் அதிமுக எம்.பி.க்களிடம் உறுதி அளித்துள்ளனர்.
ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் குழுவை இரண்டு முறை மத்திய அரசு சென்னைக்கு அனுப்பி வைத்தது. ஜெயலலிதாவை பார்க்க இந்த டாக்டர்கள் அனுமதிக்கப்பட்டாலும், அவர்களுக்குரிய சுதந்திரம் முழுமையாக தரப்படவில்லை என அப்போதே புகார்கள் எழுந்தன.
உதாரணமாக, எய்ம்ஸ் டாக்டர்கள் பார்க்கும்போது ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சை செய்யப்பட்டு வந்ததோ, என்ன மருந்துகள் செலுத்தப்பட்டு வந்ததோ அதைப் பற்றி மட்டுமே அப்போலோ டாக்டர்கள் அவர்களுக்கு விளக்கம் அளித்தனர். அந்த நாளுக்கு முந்தைய நிலைமைகள் குறித்தும் சிகிச்சைகள் குறித்தும் எய்ம்ஸ் டாக்டர்களுக்கு எந்த தகவலும் தரப்படவில்லை அது தொடர்பான எய்ம்ஸ் டாக்டர்களின் கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சென்னையில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து எய்ம்ஸ் டாக்டர்கள் மத்திய நல்வாழ்வு அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கு அறிக்கை அளித்தனர். அவர் அதை தனது குறிப்புகளுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு அனுப்பினார். அவர் அதை பிரதமர் மோடியின் பார்வைக்கு கொண்டு சென்றார்.
அப்போது, அப்போலோ ஆஸ்பிடலுக்கு ஜெயலலிதா கொண்டு வரப்பட்ட இரவில் அவரது நிலைமை எப்படி இருந்தது என்பது குறித்து உளவுத்துறை சேகரித்த தகவல்களும் பிரதமர் கவனத்துக்கு எடுத்துவரப் பட்டன. “தவறான சிகிச்சை மற்றும் தவறான மருந்துகளால் ஜெயலலிதாவின் உடலில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இனிமேல் மருந்துகளாலும் சிகிச்சையாலும் காப்பாற்றப்ப்ட முடியாத நிலையை அப்போதே அவர் அடைந்திருந்தார்” என்று அப்போலோ ஆஸ்பத்திரியின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு டாக்டர் தனது தோழிக்கு அனுப்பிய செய்தியும் அதில் இடம் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் புகழ் பெற்ற ஒரு தலைவரை, ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கும் ஒருவரை 75 நாட்கள் ஒரு ஆஸ்பத்திரியில் வைத்திருந்து கவர்னர், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்கள் என எவருமே அவர் முகத்தைக்கூட பார்க்க முடியாமல் மறைத்து வைக்க ஒரு தனி நபர் அல்லது ஒரு குடும்பத்தால் முடிகிறது என்பதே ஜனநாயகத்துக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் விடுக்கப்படும் பெரிய சவால் என மத்திய அரசு கருதுகிறது. ஜெயலலிதாவின் மர்ம மரணம் மிக ஆபத்தான ஒரு  முன்னுதாரணம் ஆகிவிடக் கூடாது என்பதில் மோடி அரசு அக்கறை காட்டுகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களை களையும் வகையிலும், சதி நடந்தது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகளுக்கு  கடுமையான தண்டனை வழங்க வசதியாகவும் இந்த விவகாரத்தில் ஒரு விசாரணை அவசியம் என மோடி கருதுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குற்றத் தடுப்பு மற்றும் நிவாரணம் என்பதை தாண்டி இந்த பிரச்னையில் உள்ள அரசியல் லாப நஷ்டங்கள் பற்றியும் மத்திய அரசு விரிவாக ஆராய்ந்து வந்திருக்கிறது. ஜெயலலிதா மறைவால் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ள போதிலும், பாரதிய ஜனதா கட்சியால் இப்போதைக்கு அந்த வெற்றிடத்தை நிரப்புவது சாத்தியம் இல்லை என அது உணர்ந்துள்ளது. எனினும், தமிழக ஆளும் கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ள முக்கியமான இந்த விவகாரத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி இயன்றவரை ஆதாயம் தேடுவதிலும் அதற்கு தயக்கம் இல்லை.                .
நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை என்பது மத்திய அரசின் அதிகார வரம்பில் வரக்கூடிய விஷயம். இதை மத்திய அரசு முன்னிருந்து செய்யதவரினால் மத்திய மோடி அரசின் மீதும் சந்தேக கரை படியும் நிலைதான் உள்ளது  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகத்துக்கு உரியவர்களாக பார்க்கப்படும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போதைய எடப்பாடி கே.பழனிசாமி அரசை உருவாக்கியவர்கள். எனவே, அவ்வாறான ஒரு விசாரணைக்கு எடப்பாடி கே.பழனிசாமியின் அரசு வெளிப்படையாக சம்மதிக்க இயலாது. அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம் அனியின் கோரிக்கையை நிறைவேற்றுவதன் மூலம், நன்றிக்கடன் பட்ட ஓர் அரசை தமிழகத்தில் நிறுவி, அதன் மூலம்  மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தவும், அம்மாநிலம் சம்மந்தமான ஏனைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதும் சுலபமாக இருக்கும்.
இந்த காரணங்களின் அடிப்படையில் விரைவிலேயே விசாரனை கமிஷன் அமைக்கப்படும் என செய்தி பரவி வருகிறது. இது பன்னீர் செல்வத்தின் பக்கம் உள்ளவர்களுக்கு உற்சாகத்தையும், வி.கே
சசிகலா அணியில் இருப்பவர்களுக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.
வி.கே.சசிகலாவுடன் இருந்த வரையில். “ஆஸ்பத்திரியில் அம்மா சுவீட் சாப்பிட்டார், உப்புமா கேட்டு வாங்கி தின்றார்” என கதை சொல்லிக் கொண்டிருந்த அதிமுக செய்தி தொடர்பாளர் சி. பொன்னையன், “அம்மா மரணத்தில் சசிகலாவுக்கு பங்குண்டு. ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லுமுன் போயஸ் தோட்ட வீட்டில் அம்மா தாக்கப்பட்டிருக்கிறார்” என்று முதல் முறையாக செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார். “அம்மா சாவுக்கு காரணமானவர்களை தண்டிக்கும் வரை ஓயமாட்டோம்” என்று கே.பி.முனுசாமி சபதம் செய்திருக்கிறார்.
ஆனால் சசிகலா பக்கம் இருக்கும் அமைச்சர்கள் குரலில் நேற்றுவரை இருந்த தன்னம்பிக்கையும் மெத்தனமும் காணாமல் போய்விட்டன. கவர்னரால்கூட ஜெயலலிதாவை பார்க்க முடியவில்லை என்பது இதுவரை மறுக்கப்படாத நிலையில், “அம்மாவை நான் தினமும் கண்ணாடி வழியாக பார்த்து வந்தேன்” என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அதிரடியாக பொய் சொல்லி இருக்கிறார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எல்லோரையும் தாண்டி ஆகாசப் புளுகு ரேஞ்சுக்கு போய்விட்டார். “ஜெயலலிதா சாவுக்கு வி.கே.சசிகலா காரணம் என்று மக்கள் எல்லோரும் சந்தேகப் படுகிறார்கள். அது உண்மை கிடையாது. நான் ஒரு ரகசியத்தை இப்போது செல்கிறேன். அம்மா நன்றாக உடல் நலத்துடன் இருந்தார். தினமும் நாங்கள் (அமைச்சர்கள்) அவரை சந்தித்து பேசுவோம். எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்று ஆலோசனை சொல்லுவார். இடைத் தேர்தல் வருகிறது; எல்லோரும் போய் பிரசாரம் செய்யுங்கள் என்று எங்களுக்கு ஆசி கூறி அனுப்பி வைத்தார். பின்னர் நான் விரும்பிய படியே நமது கட்சியை ஜெயிக்க வைத்து விட்டீர்கள், உங்களை பாராட்டுகிறேன் என்று பெருமையுடன் சொன்னார்” என்று பெரிய நூலாக சுற்றியிருக்கிரார் திண்டுக்கல் சீனிவாசன்.
ஜெயலலிதா யாருடனும் பேசவில்லை, யாரையும் சந்திக்கவில்லை என திரும்பத் திரும்ப வி.கே.சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சொல்லி வந்த கதையை ஒரே மேடையில் உடைத்து கிழித்து எறிந்து விட்டாரே என்று வி.கே.சசிகலா அணியினர் அதிர்ச்சியில் உறைந்து சிலையாய் நிற்கிறார்கள்.
விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் மொத்த வண்டவாளமும் தண்டவாளம் ஏறிவிடும் என்ற பயத்தில் அமைச்சர்கள் வாய்க்கு வந்ததை  உளற தொடங்கி இருக்கிறார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியின் முன்வரிசை பிரமுகர்கள் கூறுகின்றனர். ”அறிவிப்பு வந்த பிறகு பாருங்கள் வேடிக்கையை. ஒவ்வொரு அமைச்சராக வரிசையில் வந்து வி.கே.சசிகலா குடும்பத்தினர் செய்த பயங்கர குற்றங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக புட்டுப் புட்டு வைப்பார்கள். மன்னார்குடி கூட்டத்தின் மாயாஜால ஆட்டமெல்லாம் சீக்கிரமே அடங்கப் போகிறது. அம்மாவுக்காக மண் சோரு தின்றதாக கதை விட்ட போலி விசுவாசிகள் எல்லாம் ஜெயிலில் களி தின்னப் போகிறார்கள்” என்று உற்சாகமாக சொன்னார் பி.எச்.பாண்டியன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக