நடிகர் லாரன்சுக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டம் கொடுத்தாச்சு....அடுத்து முழு நேர அரசியல்ல ஈடுப்பட போறாராம்....! சரி, ’இந்திய குடியுரிமை பெற்ற எவரும் தேர்தலில் போட்டியிடலாம்'னு இந்திய அரசியல் சாசனம் சொல்லுது. அப்படி பார்த்தா, நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் எந்த தடையும் இல்லை.
ஆனால், இவர்கள் அரசியலுக்கு வருவதற்கான காரணம் என்ன...? என்ன உள் நோக்கத்துடன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள்..? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதில்களை தான் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொள்வோம். தற்போது தமிழகத்தில் அரசியல் தலைவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதா...? இல்ல, திறமையான அரசியல் தலைவர்கள் இல்லையா...? இல்ல, திறமையான அரசியல் தலைவர்கள் இருந்தும் சரியாக செயல்பட வில்லையா...? இதில் எந்த குறைப்பாட்டிற்காக நடிகர்களும் அரசியலில் நுழைய நினைக்கிறார்கள்..?
சிம்பிள்ளா சொல்லனும்னா, ஒரு வகுப்பில் ஒரே பாடத்தை நடத்த எதற்கு ஒன்பது ஆசிரியர்கள்...?
சரி, தமிழகத்தில் முதன்மையான கட்சிகள் 10 இருக்குன்னு வெச்சிக்குவோம். இந்த பத்தில் ஒன்றுக்கு கூட சேவை மனப்பான்மை இல்லை என்பதால் தான் நாங்கள் அரசியலுக்கு வருகிறோம்னு சொல்ல வராங்களா..?
நான் நடிகர்களிடம் கேட்கிறேன். 'ஒரு மாநில முதலமைச்சரின் மாத சம்பளம் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை தான். ஆனால், நடிகர்கள் ஆகிய உங்களுக்கு 30 நாள் கால்ஷீட்டில் வரும் சம்பளம் 20 கோடி. ஏங்க, மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்காக மாதம் 20 கோடி ரூபாயை இழக்கும் அளவிற்கு நீங்க என்ன அவ்வளவு சேவை மனப்பான்மை கொண்டவர்களா'..?
அரசியலுக்கு வர துடிக்கும் நடிகர்களிடம் கண்டிப்பாக 200 கோடிக்கு மேல் பணம் இருப்பு இருக்கும். இவர்களுக்கு உண்மையிலேயே மக்கள் மீது அக்கறை இருக்கிறது என்றால் அந்த 200 கோடியில் ஒரு 50 கோடியை மக்களின் நலத் திட்டங்களுக்கு செலவு செய்யலாமே...? வெறும் 30 ஆயிரம் ரூபாய்க்காக 20 கோடியை தூக்கி போடும் நடிகர்களுக்கு இது சாதாரணம் தானே...?
அப்படி எந்த நடிகராவது இதுவரை செய்துள்ளாரா..? இல்லையே !! பிறகு எப்படி நடிகர்களுக்கு சேவை மனப்பான்மை இருக்கிறது என நம்ப முடியும்...?
தற்போது தமிழக அரசியலில் முன்னிறுத்தப்படும் நடிகர்கள் ரஜினிகாந்தும், விஜய்யும் தான் (விஜய காந்த் அரசியல்வாதி ஆகிவிட்டார். அதிருப்தியே என்றாலும் அவரை பற்றி பின்னால் பேசுவோம்) இப்ப தான் புதுசா மக்கள் சூப்பர் ஸ்டார் லாரன்ஸ் எல்லாம் வந்திருக்கார்.
ரஜினி காந்தை எடுத்துக் கொண்டால், ஒரு சாதாரண விஷயத்தில் முடிவெடுப்பதில் கூட ஏகப்பட்ட திணறல்கள். இவரால் சுயமாக முடிவு எடுக்க முடியாது என பல விஷயங்களில் பார்த்து விட்டோம். ஆனால் 'பூச்சாண்டி' காட்டுவதில் உண்மையிலேயே சூப்பர் ஸ்டார்.
ஒன்று அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்ல வேண்டும். இல்லையா, வர மாட்டேன் என்று திட்ட வட்டமாக கூறிவிடலாமே. எதற்கு இப்படி சுத்தலில் விட வேண்டும்...? அவ்வப்போது அரசியல் விளையாட்டு வேறு ஆடுவார்.
தேசிய நதி நீர் இனைப்பு திட்டத்திற்கு 1 கோடி அளிப்பதாக அறிவித்தார். கிட்ட தட்ட 30 வருஷமா இழுவையில் இருக்கிற திட்டத்துக்கு போய் எதுக்கு 1 கோடி அறிவிச்சிருக்காருன்னா.. அத்திட்டம் செயல்பாட்டிற்கு வர 10 வருஷமாகலாம். 20 வருஷமாகலாம். அல்லது வராமல் கூட போகலாம். நம்ம பணம் நம்மள விட்டு போகாது. வராத திட்டத்திற்கு பணம் அறிவிப்பதை விட தற்போது நடைப்பெற்று கொண்டிருக்கும் மெட்ரோ திட்டத்திற்கு அந்த பணத்தை அளிக்கலாமே..ஏன் தரவில்லை ? ஏன்னா, அவங்க அடுத்த நாளே வந்து கலெக்ட் பண்ண்டுவாங்க. :) இப்படி நிறைய உதாரணங்கள் கூறலாம். ஆக, இவருக்கு அரசியலில் நுழைய தெளிவான நோக்கம் இல்லை.
அடுத்து விஜய்யை பாருங்க. இவர் ஓப்பனிங்லேயே போல்ட் ஆகிட்டாரு. முதலில் டெல்லிக்கு போய் ராகுலை பார்த்தார். பயனில்லை. அப்படியே அண்ணா ஹசாராவை பார்த்தார். அங்கும் பயனில்லை. பிறகு ஜெயலலிதா. ம்ஹும். அப்புறம் கோயம்புத்தூர் போய் மோடியை சந்தித்து ஆதரவு கொடுக்கிறார்.
ஏங்க விஜய், உங்களுக்கு கொள்கைன்னு ஒன்னு இல்லவே இல்லையா..? காங்கிரஸ் கொள்கை பிடிச்சிருந்தா, பா.ஜ.க எந்த போஸ்ட் கொடுத்தாலும் ஏற்க கூடாது. இல்ல, பா.ஜ.க கொள்கை பிடிச்சிருந்தா ஜெயலலிதாவை சந்திச்சிருக்க கூடாது. ஆக, உங்களுக்கு ஒரு போஸ்ட் வேனும். அது எந்த கட்சியில் கிடைத்தாலும் சரி. அது தானே உங்க நிலைப்பாடு..? இதுவா உங்க அரசியல் நோக்கம்...?
அன்னிக்கு ராகுலை, மோடியை பார்ப்பதற்கு முன் எத்தனை ரசிகர்களிடம் கருத்து கேட்டீர்கள்..? ரசிகர்களை நம்பி இருக்கும் நீங்கள் அவர்களிடம் கலந்துரையாடமல் சுய நலமாக ஆதரவு தெரிவித்தது உங்கள் ரசிகர்களுக்கு செய்த துரோகம் தானே...? உங்களை ஏற்றி விட்ட ரசிகர்களுக்கே துரோகம் செய்த நீங்கள் மக்களுக்கும் செய்ய மாட்டீர்கள் என என்ன நிச்சயம்...?
இதுமட்டுமில்லாம பிரதமருக்கு விஜய் ஒரு லெட்டர் அனுப்பினார். 'தென்னிந்திய திரையுலகம் அதாள பாதாளத்தில் உள்ளது. நாங்கள் கலையை உயிர் மூச்சாக கொண்டுள்ளோம். நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்'னு குறிப்பிட்டுருந்தார்.
ஏங்க, நீங்க கலையை உயிர் மூச்சா நினைச்சா அதிலிருந்தே அதை வளர்க்க வேண்டியது தானே...? எதுக்கு அரசியலுக்கு வறீங்க...? இப்படி எல்லாருமே அரசியலுக்கு வந்துட்டா நீங்க உயிர் மூச்சா நினைக்கிற கலையை யாரு வளர்ப்பா...? கடைசியில் மூச்சே நின்று விடுமே..!!
இப்ப புதுசா லாரன்ஸ் ராகவேந்திரா வேற அரசியலுக்கு வரப்போகிறாராம்...என்னடா சோதனை இது....ஜல்லிக்கட்டு போராட்டத்துல அத்தனை ஆர்வம் காட்டியது இதற்கான முன்னோட்டம் தானா?
500, 1,000 ரூபாய் கொடுத்தாலே நம்ம ஜனங்க ஓட்டு போட்டுடுவாங்க...லாரன்ஸ் வேறு திடீர் திடீர்னு வந்து இதுக்கு ஒரு கோடி தரேன்...அதுக்கு ஒரு கோடி தரேன்னு சொல்றாரு....யப்பா சாமி, அந்த ஒரு கோடி பணத்துக்கு அந்த பட்டத்தை வேணும்னாலும் வெச்சிக்க ஆனா அரசியலுக்கு மட்டும் வந்துடுதே...உங்க நடிகர்களோட சேவையை பார்த்து ஏற்கனவே பூரிச்சு போய் இருக்கோம்...!
நண்பர்களே...நடிகர்களின் உள் நோக்கம் என்னான்னு இப்ப உங்களுக்கு நல்லா புரிஞ்சிருக்கும். இதுக்கெல்லாம் யார் காரணம் தெரியுமா...? ரசிகர்கள் தான். நீங்க நல்லா பாருங்க...ஒரு நடிகனின் கட் அவுட்டிற்கு பால் ஊற்றுபவன் 100க்கு 90 சதவீதத்தினர் பட்டதாரியா இருக்க முடியாது. மாத சம்பளம் பத்தாம கை செலவுக்கு காசு கிடைக்குமான்னு எதிர்ப்பார்க்கிறாங்க பாருங்க...அவங்க தான் ரசிகர்களை தூக்கி வெச்சி கொண்டாடுறாங்க.
ரசிகர்கள் தான் 'தலைவா...எப்ப அரசியலுக்கு வருவீங்க..? உங்கள நம்பி தான் தமிழ்நாடே இருக்கு'ன்னு உசுபேத்தி விடுவாங்க. காரணம், அந்த நடிகர் அரசியலில் பெரிய ஆள் ஆகிட்டா அவரை வெச்சி நாமளும் ஒரு நல்ல நிலைமைக்கு வந்துடனும்னு தப்பு கணக்கு போடுறாங்க.
நல்லா யோசிச்சி பாருங்க. எம்.ஜி.ஆருக்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் இருந்துச்சி. ஆனா, அவர் முதலமைச்சர் ஆனவுடன் ரசிகர்கள் யாராவது எம்.எல்.ஏ ஆனதுண்டா...? அட கவுன்சிராவது ஆனாங்களா..?
அவ்வளவு ஏன்...முன்னாடி விஜயகாந்துக்கு ஏகப்பட்ட ரசிகர் மன்றங்கள் இருந்துச்சி. எங்கே இப்ப அவருடைய கட்சியில் ஏதாவது ஒரு ரசிகனாவது எம்.எல்.ஏ வா இருக்காரா..?(எம்.எல்.ஏக்கள் கூட இல்ல அது வேற விஷயம்) அவருடைய மச்சினன் சுதீஷ் தான் விஜயகாந்துக்கு போஸ்டரும் கட் அவுட்டும் வெச்சாரா...? இந்த நாடகம் ஏன் இன்னும் ரசிகர்களுக்கு புரியல...? :(
ரசிகர்களுக்கும் மக்களுக்கும் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் திறமை எப்போ தான் வரும்...? நிஜ வாழ்க்கையில் கூட நடிகர்கள் ஹீரோக்களா தான் இருக்காங்க...ஆனா மக்கள் நாம தான் காமெடியன்களா மாறிட்டோம் :(
தனக்கு இருக்கும் 'ஸ்டார்' அந்தஸ்த்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றவும் கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நோக்குடன் எந்த உச்ச நடிகர் அரசியலுக்கு வந்தாலும் மக்கள் தோற்கடிக்க வேண்டும். இதை புரிந்துக் கொண்டு நடிகர்களின் மாய வலையிலிருந்து மீண்டு எழுமா தமிழகம் ? ? :( :(
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக