தனி ஒருவன்
---------------------
மு.க.ஸ்டாலின் முதலில் இருந்தே விரும்பியது இதைத்தான். "இந்த சட்டசபை தேர்தலை திமுக தனியாக சந்திக்க வேண்டும்".
அது நடந்து விட்டது. அவருடைய நோக்கம் என்ன என்பதை பற்றி ஆராய்ச்சி நடத்த அவசியம் இல்லை.
கூட்டணி விஷயங்கள் பேசப்படாமல் இல்லை. வலுவான கூட்டணி அவசியம் என்று திமுக தொண்டர்கள் நினைத்தார்கள். தலைவர் கருணாநிதியும் அதை எதிரொலித்தார். தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால் பலன் கிட்டும் என்ற நம்பிக்கையும் தொண்டர்களை போலவே தலைவருக்கும் இருந்தது.
வாரிசுக்கு இல்லை.
கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பொறுமை வேண்டும். அனுசரித்து போக தெரிய வேண்டும். ஸ்டாலினுக்கு அதெல்லாம் வராது. குடும்பத்திலும் கட்சியிலுமே அனுசரித்து போக முடியாதவருக்கு அது சாத்தியமா? கிடையாது.
ஆனால் எல்லோரும் விரும்புகிறார்களே என்பதால் தவிர்க்கவும் முடியவில்லை. விட்டு பிடிப்போம் என நினைத்தார்.
ஆட்சியில் பங்கு, உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி என்று தேமுதிக நிபந்தனை விதித்தது. ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி. 'அப்பாடா, இவர்களோடு கூட்டணி அமையாது'. அமையவில்லை.
மக்கள் நல கூட்டணி விஜயகாந்தை அமுக்கியது. முதலமைச்சர் வேட்பாளராக உங்களை ஏற்றுக் கொள்கிறோம் என்று ஒருங்கிணைப்பாளர் வைகோ சொன்னார். விஜயகாந்த் சம்மதித்தார். சீயெம் ஆசையில்தானே கட்சி தொடங்கி கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு நடத்தி வருகிறார்.
'இருபது முப்பது எம்.எல்.ஏ.க்களை ஜெயிக்க வைப்போம். சட்டசபையில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். அதை பார்த்து மக்கள் மயங்குவார்கள். அடுத்த முறை நம்மை ஆளுங்கட்சி ஆக்குவார்கள்' என்று சென்ற முறை விஜயகாந்த் நம்பினார்.
அது நப்பாசை. எதிர்க்கட்சி சிறப்பாக செயல்பட ஆளுங்கட்சி அனுமதிக்குமா?
திமுக, அதிமுகவோடு கூட்டணி வைத்து ஜெயித்த எந்த கட்சியாவது சட்டசபையில் சிறப்பாக செயல்பட முடிந்ததா? இல்லை. ஒரே வித்தியாசம், ஜெயலலிதா அந்த எம்.எல்.ஏ.க்களை உண்டு இல்லை ஆக்கி விடுவார். கருணாநிதியோ அவர்கள் கொடுக்கும் துண்டு சீட்டுகளை சேகரித்துக் கொண்டு அவர்கள் கேட்டதை செய்து கொடுத்து மவுனமாக்கி விடுவார்.
மானை வளர்த்து புலியிடம் கொடுத்த கதையாக எம்.எல்.ஏ.க்களை உருவாக்கி ஆளுங்கட்சியிடம் அடகு வைக்க இனியும் விஜயகாந்த் தயாரில்லை. கிங் மேக்கர் ஸ்டிக்கரும் அவருக்கு பிடிக்கவில்லை.
அந்த டீலிங் ஸ்டாலினுக்கு பிடித்திருந்தது. ஏன்?
நமக்கு நாமே பயணம் போனார். நல்ல கூட்டம் வந்தது. கூட்டம் மொத்தமும் உங்களுக்கு ஓட்டாக மாறும் என்று சபரீசனின் ஹைடெக் டீம் சர்வே எடுத்து கொடுத்தது. தளபதி நம்பிவிட்டார்.
செல்போன் டவரில் உட்கார்ந்து கொண்டு சிக்னலுக்கு ஏங்குவானா எவனும் என்று கேட்டார்.
சிக்னல் இல்லாமலே காங்கிரஸ் வந்து விட்டது. அதற்கு போக்கிடமும் இல்லை. கதவு திறந்தால் அறிவாலயம்; சாத்தினால் தனியாலயம்.
சற்று மிரண்டுதான் போனார் ஸ்டாலின்.
போன தடவை 63 தந்தீர்கள். மேலே 7 போட்டு 70 கொடுங்கள் என்று குலாம் நபி ஆசாத் கும்பிடு போட்டபோது நிம்மதியானது ஸ்டாலினுக்கு. 'வெரிகுட், இவங்களும் சேரமாட்டாங்க'.
'லாஸ்ட் டைம் பாமகவுக்கு 20 கொடுத்தீங்க. விடுதலை சிறுத்தைகளுக்கு 10 கொடுத்தீங்க. அவங்க இப்ப இல்லை. அதனால எங்களுக்கு 70 கொடுத்தாலும் உங்களுக்கு நஷ்டம் இல்லையே' என்றார் இளங்கோவன்.
காங்கிரசுக்கும் அறிவாலயத்தில் அல்வா கிண்டப்படுகிறது என தெரிந்து கருணாநிதி கடுப்பானார். விஜயகாந்தை விட்டதிலேயே அவர் அப்செட். ஸ்டாலினுக்கு ஸ்பீட் பிரேக் போட தீர்மானித்தார்.
மு.க.அழகிரி சந்திப்பு நடந்தது.
அரசியலில் தற்செயலாக எதுவும் நடக்காது. திட்டமிட்டு நகர்த்தப்படும் நிகழ்வுகள் எதேச்சையாக நடப்பது போல் சித்தரிக்கப்படும். அவை மக்களுக்கானது அல்ல. சம்மந்தப்பட்ட நபருக்கு மெசேஜ் சொல்வது மட்டுமே குறிக்கோள்.
விஜயகாந்த் போக்கு காட்டி ஏமாற்றி விட்டார் என்று திமுக போராளிகள் பொங்குகிறார்கள். திமுகவுடன் சேரவில்லை என்பதில் சிறு கோபம். மநகூ பக்கம் போனதில் பெருங்கோபம். போட்டு தாக்குகிறார்கள். இதுவே வைகோவுக்கு வெற்றிதான். பழி வாங்கும் படலத்தில் குருவை மிஞ்சி விட்டார்.
மநகூவின் பெயரை கேநகூ என மாற்றுவது வரை போராளிகளின் ஆட்டம் அதிர வைக்கிறது. தப்பில்லை. இதுதான் நமக்கு பழக்கப்பட்ட அரசியல்.
அதற்காக விஜயகாந்த் அணியில் உள்ளவர்கள் அதே பாணியில் பதிலடிக்க தேவையில்லை.
மாற்று அரசியலை முன்னெடுப்பவர்கள் அந்த மாற்றத்தை தங்களிடம் இருந்து தொடங்கினால்தான் மக்கள் மதிப்பார்கள். மாறாக கழக அரசியல் பாணியிலேயே லாவணி பாடினால் பரிதாபம்தான் மிஞ்சும்.
அதிமுக, திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட முதல் காரணம் ஊழல். அது வளர உதவியது திரைமறைவு நிர்வாகம். அதில் முதல்வர் குடும்பம் அல்லது தோழி குடும்பம் தலையீடு. இந்த குறுக்கீடுகள் இல்லாதிருந்தால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இத்தனை அவப்பெயர் வந்திருக்காது.
கர்ணனின் அழிவு கண்மூடித்தனமான நட்பால் விளைந்தது. கவுரவர் அழிவு திருதராஷ்டிரனின் கண்மூடித்தனமான பாசத்தால் நேரிட்டது. இரு தலைவர்களுக்கும் இது தெரியாத உண்மையல்ல.
கட்சிக்காரர்களை கைக்கு எட்டாத தொலைவில் நிறுத்திவிட்டு மனைவி மைத்துனரை கிட்டத்தில் வைத்து அரசியல் நடத்தும் விஜயகாந்தை மேற்படி தலைவர்களுக்கு மாற்றாக மக்கள் எப்படி ஏற்க முடியும்? மக்கள் நல கூட்டணி தலைவர்கள் விளக்க வேண்டும். வாரிசு அரசியலை விளாசி விமர்சிக்கும் இடதுசாரிகள் பதிலளிக்க வேண்டும்.
கொள்கை அடிப்படையில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள்தான் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது லட்சிய சிந்தனை. நடைமுறைக்கு சரிவராது. மக்கள் நலன், நல்ல ஆட்சி என்ற குறைந்தபட்ச செயல் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் ஒன்று சேரலாம்.
தேர்தலோடு உறவு முடிந்ததாக அறிவித்து மக்களை ஏமாற்றுவது தவறு. கூட்டணி அரசு அமைத்து பரஸ்பரம் ஒப்புக் கொண்ட திட்டங்களின் அடிப்படையில் நிர்வாகம் செயல்பட வழிவிட்டு, ஒருவர் தவறு செய்யாமல் இன்னொருவர் கண்காணிக்கும் கட்டமைப்பை நிறுவினால் அதை கைதட்டி வரவேற்கலாம்.
முதல் முறையாக வலுவான மூன்று சக்திகள் மோதுகின்றன. பாமக, பாஜக, நா.த போன்றவை பலத்தை சோதிக்க களம் இறங்குவதை பாராட்ட வேண்டும். ஆனால், எந்த கோணத்தில் பார்த்தாலும் ஜெயலலிதா விரும்பிய வியூகத்தையே ஏனைய கட்சிகள் அமைத்து கொடுத்திருப்பதாக தோன்றுகிறது.
ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இந்த வியூகம் அவருக்கு உதவும் என்று சொல்லிவிட முடியாது. தனிப்பெரும் கட்சியாக வரக்கூடும்.
இரண்டாம் இடம் யாருக்கு என்பதில்தான் போட்டி.
காத்திருக்க தயாரானவனுக்கு காலம் வழிகாட்டும் என்பார்கள். ஸ்டாலின் அதை நம்புகிறார். நல்ல நம்பிக்கை பொய்ப்பதில்லை.
ரே
நம்ம அடையாளம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக