75 நாள்கள் எப்படி இருந்தார் ஜெயலலிதா?
– மூன்று ரிப்போர்ட் முழு விவரம்
**************************************************************
சந்தேகத்தைத் தீர்ப்பதற்காகச் சொல்லப்படும் விளக்கம், இன்னும் பல புதிய சந்தேகங்களை உருவாக்குமா? ஜெயலலிதா மரண விஷயத்தில் தமிழக அரசு சார்பில் அளிக்கப்படும் விளக்கங்கள் அப்படியான விளைவுகளையே ஏற்படுத்துகின்றன.
‘மருத்துவமனையில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்’, ‘நர்ஸ்களோடு விளையாடினார்’, ‘காவிரிப் பிரச்னை குறித்து விவாதித்தார்’ என்றெல்லாம் சொன்னார்கள். ‘ஜெயலலிதா எப்போது வீட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார்’ என அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி சொன்னார்.
ஆனால், ‘இவற்றில் எதுவுமே உண்மையில்லை’ என்பதை இப்போது அவர்கள் தந்திருக்கும் அறிக்கைகளே அம்பலப்படுத்தி இருக்கின்றன.
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அப்போலோவின் 12 பக்க சிகிச்சை சுருக்கம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக் குழு ஐந்து முறை வந்து, சிகிச்சை பற்றி நிகழ்த்திய ஆலோசனைகள் தொடர்பான அறிக்கை, இவைதவிர, தமிழக அரசு சார்பில் ஓர் அறிக்கை என மூன்று அறிக்கைகள் மார்ச் 6-ம் தேதி, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனால் வெளியிடப்பட்டன. ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகங்களைக் கிளப்பி ஓ.பன்னீர்செல்வம் அணியினர் உண்ணாவிரதம் இருக்கும் நேரத்தில், இந்த அறிக்கைகள் வெளியாகியுள்ளன.
எனவே, இந்த அறிக்கைகளின் நோக்கம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால், அந்த நோக்கத்தை இவை பூர்த்தி செய்தனவா?
ஜெ. அட்மிட் ஆனதும் அப்போலோ வெளியிட்ட முதல் அறிக்கை, ‘நீர்ச்சத்துக் குறைபாடுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெறுகிறார்’ எனச் சொன்னது. ஆனால், இப்போது அவர்கள் அளித்திருக்கும் அறிக்கை, முற்றிலும் வேறாக இருக்கிறது. மருத்துவமனைக்கு வந்தபோதே ஜெ.வுக்கு ஒன்பது பிரச்னைகள் இருந்ததாகப் பட்டியலிடுகிறது
அப்போலோ. செப்டிசீமியா நோய்த்தொற்று, நுரையீரல் தொற்று, இதய வால்வில் பிரச்னை, தீவிர சர்க்கரை நோய், ரத்த அழுத்தக் குறைவு, தைராய்டு குறைபாடு, ஆஸ்துமா, வயிற்றுக்கோளாறு, தோல் அரிப்பு என அந்தப் பட்டியல் நீள்கிறது.
அப்போலோ ஆம்புலன்ஸ் செப்டம்பர் 22-ம் தேதி போயஸ் கார்டனுக்கு வந்தபோதே, ஜெயலலிதா அங்கு சுயநினைவற்ற நிலையில்தான் இருந்திருக்கிறார். அவரது ரத்த அழுத்தம் தாறுமாறாக இருந்துள்ளது. சுவாசிக்க முடியாமல் தவித்திருக்கிறார். செயற்கை சுவாசம் அளித்தபிறகும், அவருக்கு நினைவு திரும்பவில்லை.
சர்க்கரை நோய்க்கும், ரத்தக்கொதிப்புக்கும் பல ஆண்டுகளாக மாத்திரை சாப்பிட்டு வந்தார் ஜெயலலிதா. இதுதவிர, தோல் அலர்ஜி ஏற்பட்டதால் ஸ்டீராய்டு மாத்திரைகளையும் அப்போது எடுத்துக்கொண்டு இருந்திருக்கிறார். ‘அப்போலோவில் அட்மிட் ஆவதற்கு ஒரு வாரம் முன்பாக அவருக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு இருந்துள்ளது’ என்கிறது இந்தச் சிகிச்சை அறிக்கை.
அத்துடன், ‘கடுமையான சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு ஒரு வாரமாக ஜுரத்தில் அவதிப்பட்டார்’ என்றும் சொல்கிறார்கள். ‘மூச்சுத்திணறல் மற்றும் இருமல் பிரச்னையும் அப்போது அவருக்கு இருந்தது’ என்கிறது எய்ம்ஸ் அறிக்கை.
இந்த ஜுரத்துடன் அவர் எப்படி அன்று காலையில் ஓர் அரசு விழாவில் பங்கேற்றார் என்பதும், இவ்வளவு பிரச்னைகளோடு இருந்தும் அவர் ஏன் முன்கூட்டியே மருத்துவ ஆலோசனை பெறவில்லை என்பதும் விடை தெரியாத கேள்விகள்.
‘சிறுநீரகத் தொற்றுக்கும் ஜுரத்துக்கும் அவர் சாதாரண ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் எடுத்துக்கொண்டார்’ என்கிறது எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் முதல் அறிக்கை. ஒரு முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை இவ்வளவு அலட்சியமானதாகவா இருந்திருக்கும்?
‘அப்போலோ ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்பே போயஸ் கார்டனில் அவர் சுயநினைவு இழந்த நிலையில்தான் இருந்தார்’ என்பது இந்த அறிக்கைகள் மூலம் உறுதியாகியுள்ளது. ‘அவர் ஏன் சுயநினைவு இழந்தார்? அந்த அளவுக்கு அவருக்குத் திடீரென என்ன ஆனது?’ என்ற ஓ.பிஎஸ் அணியினர் எழுப்பும் கேள்விகளுக்குத்தான் பதில் இல்லை.
அட்மிட் ஆனபோது ஜெயலலிதாவின் நுரையீரலில் ஏராளமாக திரவம் சேர்ந்திருந்தது. இது தந்த அழுத்தம் காரணமாக, இதயம் செயல்பட முடியாமல் தவித்தது. நுரையீரலும் இதயமும் முறையாக செயல்படாததால், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு தாறுமாறாகக் குறைந்திருந்தது.
இதனால், கடுமையான மூச்சுத்திணறல் அவருக்கு ஏற்பட்டது. வேறுவழியின்றி பல ட்யூப்களால் அவர் பிணைக்கப்பட்டார். சுவாசம் தருவதற்கு ட்யூப், நுரையீரலில் சேரும் திரவத்தை அகற்றுவதற்கு ஒரு ட்யூப், மருந்துகளும் திரவ உணவும் தருவதற்கு ட்யூப் என எல்லாமும் இருந்தும், பல நாள்கள் அவர் அபாயக் கட்டத்திலேயே இருந்திருக்கிறார்.
இந்தச் சிகிச்சைகள் தரப்பட்டபோதே அவரது சிறுநீரகம் செயலிழக்க ஆரம்பித்து, சிறுநீர் வெளியேறும் அளவு குறைந்தது. இதற்கும் தனியாகச் சிகிச்சை தரப்பட்டது.
பெரும்பாலான நாள்கள் ஜெயலலிதா மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டு இருந்திருக்கிறார். மயக்க மருந்துகள் தரப்பட்டும் பல நாட்கள் ஜெயலலிதா தூங்கமுடியாமல் தவித்திருக்கிறார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த பல நாள்களில் அவருக்கு இந்தப் பிரச்னை இருந்துள்ளது. இரவு முழுக்கத் தூங்க முடியாமல் அவதிப்பட்டு, பகலில் தூங்கி இருக்கிறார் அவர். இயல்பான தூக்க சுழற்சி ஏன் இப்படி மாறியது என்று டாக்டர்களுக்குப் புரியவில்லை.
எய்ம்ஸ் குழு முதல்முறை வந்தபோது, ஜெயலலிதா மிக அபாயமானக் கட்டத்தில் இருந்திருக்கிறார். அவருக்கு இதயத்தில் மைட்ரல் வால்வு பிரச்னை மோசமாக இருந்தது.
அதாவது, இதயம் சுருங்கும் போது இரண்டு திசைகளிலும் ரத்தம் வெளியேறும். இதனால், உடல் உறுப்புகளுக்குப் போதுமான ரத்தம் கிடைக்காது. இந்தப் பிரச்னைக்கு ஆபரேஷன் செய்யலாமா என ஆலோசனை செய்து, ‘நோய்த்தொற்று மோசமாக இருக்கும் இந்த நேரத்தில் ஆபரேஷன் வேண்டாம்’ என முடிவு செய்திருக்கிறார்கள்.
இவ்வளவு மோசமான நிலையில் ஜெயலலிதாவைப் பார்த்த, லண்டன் மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பியெல், ‘ஜெ. பிழைக்க 60 சதவிகித வாய்ப்பு இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 14-ம் தேதி ஜெ. உடல்நிலையைப் பரிசோதித்த அமெரிக்க மருத்துவர் ஸ்டுவர்ட் ரஸ்ஸல், இங்கிலாந்து மருத்துவர் ஜெயன் பரமேஸ்வர், அப்போலோ மருத்துவர் மாத்யூ சாமுவேல் ஆகிய மூன்று இதய நிபுணர்களும், அவருக்கு அவசரமாக ஆஞ்சியோகிராம் செய்யலாமா என ஆலோசனை செய்துள்ளனர். ஆனால், அவரது உடல் தாங்காது என்பதால் தவிர்த்துவிட்டனர்.
அப்போலோவில் இருந்த 75 நாட்களிலுமே, அவர் ஒருநாள்கூட எழுந்து நடந்ததாகக் குறிப்புகள் இல்லை. ‘படுக்கையின் ஓரமாக சாய்ந்து உட்கார்ந்தார்’, ‘20 நிமிடங்கள் வீல் சேரில் அமர்ந்திருந்தார்’ என இரண்டு இடங்களில் சொல்லியிருக்கிறார்கள்.
இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடிவது, 20 நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பதே அவருக்குச் சிரமமாக இருந்திருக்கிறது.
கால்களை லேசாக அசைப்பதே அவருக்கு பெரும் பிரயத்தனமாக இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட படுத்தப் படுக்கையாக இருந்திருக்கிறார்.
அப்போலோ அறிக்கையில், ‘நோயாளி தனது தேவைகள் பற்றி மருத்துவக் குழுவோடு பேசினார்’ என்கிறது.
ஆனால், எய்ம்ஸ் மருத்துவக் குழு அறிக்கை, ‘அவருக்கு நாம் சொல்வது கேட்கிறது. அவர் உதடுகளை அசைத்து ஏதோ சொல்ல முயற்சிக்கிறார்’ என்கிறது. அதாவது, ஜெயலலிதா பேச முயற்சி செய்திருக்கிறார். ஆனால், உதடுகளைத் தாண்டி வார்த்தைகள் வரவில்லை.
ஜெயலலிதா தனது கால்களை தன் சொந்த முயற்சியால் அசைத்ததை மிகப் பெரிய முன்னேற்றமாகவும் குறிப்பிடுகிறது எய்ம்ஸ் அறிக்கை. அந்த அளவுக்குத்தான் அவர் உடல்நிலை இருந்திருக்கிறது.
ஜெயலலிதா மரணம் அடைவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக டிசம்பர் 3-ம் தேதி, அப்போலோ வந்த எய்ம்ஸ் குழு, அவருக்கு ஆஞ்சியோகிராம் செய்வது பற்றி ஆலோசனை செய்தது. ஆனால், அவரின் உடல்நிலை முன்னேறியபிறகு செய்துகொள்ளலாம் என முடிவு செய்தார்கள்.
ஒருவேளை அப்போது அதைச் செய்திருந்தால், ஜெயலலிதா உயிர் பிழைத்திருக்கக்கூடும். ஆனால், அது மரணத்தை இரண்டு நாட்கள் முன்கூட்டியே வரவழைத்திருக்கவும் கூடும்.
இந்த டிசம்பர் 3-ம் தேதி விசிட் பற்றிய எய்ம்ஸ் குழு அறிக்கை, ‘ஜெயலலிதா சுயநினைவோடு இருந்தார். ஆனால், அவர் முழுமையாக நலம் பெற பல வாரங்களோ, மாதங்களோ ஆகலாம்’ எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், ‘எய்ம்ஸ் டாக்டர்கள் ஜெயலலிதாவோடு பேசினார்கள். இன்னும் நிறைய சாப்பிடச் சொல்லி அவரிடம் சொன்னார்கள்’ என்கிறது அப்போலோ அறிக்கை.
தாங்கள் ஜெ-விடம் பேசியதாக எய்ம்ஸ் டாக்டர்கள் தங்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. மொத்தத்தில், ‘ஜெயலலிதா வீடு திரும்புவதை அவரே முடிவு செய்வார்’ என பிரதாப் ரெட்டி சொன்னபோது, அவர் அதற்கான நிலைமையில் இல்லை என்பதுதான் உண்மை.
அதேநாளில் அவருக்கு நோய்த்தொற்றும் மூச்சுத்திணறலும் மோசமானது. அவருக்கு நிமோனியா தாக்கியிருப்பதை அப்போதுதான் டாக்டர்கள் கண்டறிந்தார்கள். வென்டிலேட்டரில் வைத்து அவருக்குச் சிகிச்சை அளித்தார்கள்.
டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.20-க்கு டி.வி பார்த்துக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதாவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வேக வேகமாக அவர் மூச்சை இழுத்துவிட்டார். ‘டாக்டர்கள் உடனே தீவிரச் சிகிச்சை அளித்தனர். மார்புக்கூட்டைப் பிளந்து எக்மோ கருவியும் பேஸ்மேக்கரும் பொருத்தி, அவரை இயல்புநிலைக்குக் கொண்டுவர முயன்றனர். ஆனால், ‘அதன்பின் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றும் ஏதும் பலன் இல்லை’ என்கிறது அப்போலோ அறிக்கை.
‘ஜெயலலிதாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி மாலை 4.30 மணிக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது’ என்கிறது எய்ம்ஸ் குழு அறிக்கை. இதில் நேரத்தை, தனது பேனாவால் திருத்தி, அங்கும் ஒரு கையெழுத்து போட்டிருக்கிறார், எய்ம்ஸ் குழுத் தலைவர், டாக்டர் கில்னானி. (ஆனால், அப்போலோ அறிக்கையில் எந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டது என எதுவும் சொல்லப்படவில்லை.)
டிசம்பர் 5-ம் தேதி காலை 10 மணிக்கு எய்ம்ஸ் குழு ஜெயலலிதாவைப் பார்த்தது. எக்மோ கருவியின் செயல்பாட்டை நிறுத்தினால், ஜெயலலிதாவின் ரத்த அழுத்தம் தாறுமாறாகக் குறைந்தது. எனவே, அவரது இதயம் செயல்படவில்லை என முடிவுக்கு வந்தனர்.
பேஸ்மேக்கர் கருவியை நிறுத்தியதும், ஈ.சி.ஜி பதிவுகள் நேர்க்கோடாக வந்தன. எனவே, அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று முடிவு செய்தனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் சசிகலாவிடமும், தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த அமைச்சர்களிடமும் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டது. அவர்களில், ஓ.பன்னீர்செல்வமும் ஒருவர்.
சசிகலா குடும்பம் மட்டுமல்ல… அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவமனை, லண்டன் மருத்துவர், மாநில அரசு, மத்திய அரசு ஆகிய அனைவரும் மக்கள் காதில் பூ சுற்றுகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது. ::
நன்றி: ஜூனியர் விகடன் செய்திகள் - 08.03.2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக