அரசு நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்ற
கோரிக்கைக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதமர் மோடி
முன்னிலையிலேயே தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர்
உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க பேசினார். உடனடியாக, இப்பிரச்னைக்கு
தீர்வு காண்பதாக மேடையில் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
நாட்டில் நீதிபதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.
இதனால் நீதிபதிகளின் பணிச்சுமை அதிகரிக்கிறது.அவர்களால் திறம்பட செயலாற்ற
முடியாத நிலையும் உருவாகிறது. இதனோடு தீர்வு காணப்படாத
வழக்குகளும் தேக்கமடைகிறது. மக்களின் வாழ்க்கையும் பாதிப்படைகிறது என்று
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே வேதனையோடு தெரிவித்திருப்பது
நாடெங்கிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநில முதல்வர்கள் மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டு
மாநாடு, டெல்லியில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த
இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் பேசும்போது
இவ்வாறு வேதனையோடு தெரிவித்தார். அவர் பேசும்போது 10
லட்சம் மக்களுக்கு 10 நீதிபதிகளே உள்ளனர்.இந்த நிலையை மாற்றி, அதனை 50
நீதிபதிகளாக உயர்த்த கடந்த 1987ம் ஆண்டிலிருந்தே சட்ட அமைச்சகம்
பரிந்துரைத்து வருகிறது. ஆனால் அரசு இதில் எந்த நடவடிக்கையும்
எடுக்காமல் உள்ளது. இருந்த போதிலும் தற்போதைய நிலையில் கூட, 10 லட்சம்
பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே பற்றாக்குறை நீடித்து வருகிறது.
1987ம் ஆண்டே நீதிபதிகளின் எண்ணிக்கையை 40,000 ஆக உயர்த்த வேண்டிய தேவை
இருந்தது. அதன் பிறகு தற்போது வரை நம் மக்கள் தொகை 25 கோடி
அதிகரித்துவிட்டது. மக்கள் தொகை அதிகரிப்புக்கு தகுந்ததுபோல்
நீதிபதிகளின் எண்ணிக்கையை உயர்த்திடவேண்டும் என்பது நடைமுறை. ஆனால்,
நீதிபதிகளின் எண்ணிக்கை மட்டும் இன்னும் 21,000த்தில்
தான் உள்ளது. இது மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் மிக, மிக குறைவு.உலகிலேயே
மிக வேகமான பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடுகளில் ஒன்றாக நாம் வளர்ந்து
வருகிறோம். இந்தியாவிற்குள் அந்நிய நேரடி முதலீட்டை வரவேற்கிறோம். மேக்
இன் இந்தியா திட்டத்தை முன்னிறுத்துகிறோம். அதற்கான
முதலீடுகளை உலகம் முழுவதில் இருந்தும் ஈர்த்து
வருகிறோம்.நீதிபதியின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பது நாட்டின்
முன்னேற்றத்திலும் பங்குள்ளது.அதனால்
நாட்டின் முன்னேற்றம் கருதி, நான் இந்த தருணத்தில் கெஞ்சிக்கேட்கிறேன்.
நீதித்துறையை விமர்சிக்காதீர்கள்.
ஒட்டு மொத்த சுமையையும் நீதித்துறை மீது சுமத்தாதீர்கள். நீதித்துறையில்
மற்ற நாட்டு நீதிபதிகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டு நீதிபதிகள் கடினமாக
உழைக்கிறார்கள். அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் ஆண்டுக்கு 81 வழக்குகள்
தீர்க்கப்படுகின்றன. இதே நமது உச்ச நீதிமன்றத்தில் 2,600 வழக்குகள்
முடித்து வைக்கப்படுகின்றன. எனவே, நீதிபதிகளின் பற்றாக்குறையை தீர்வு காண
மத்திய அரசும், மாநில முதல்வர்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தேங்கியுள்ள லட்சக்கணக்கான வழக்குகளை தீர்க்க, தற்போதுள்ள நீதிபதிகளின்
எண்ணிக்கையை 21,000த்தில் இருந்து 40,000 ஆக உயர்த்த வேண்டும். மேலும்,
ஓய்வு பெற்ற நீதிபதிகளை மேலும் சில ஆண்டுகளுக்கு தற்காலிக
நீதிபதிகளாகவும் நியமனம் செய்யலாம். என இவ்வாறு பேசிய டி.எஸ்.தாக்கூர்,
ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் வடித்தார். பல இடங்களில் குரல்
உடைந்து தழுதழுக்கவும் பேசினார்.இதனால் அரங்கமே விக்கித்து போனது.
என்ன செய்வது என தெரியாமல் சில நொடிகள் தவித்தனர் அனைவரும்.
உடனடியாக அங்கிருந்த பிரதமர் மோடி
சட்ட அமைச்சகம் அளித்த நிகழ்ச்சி நிரலில் பிரதமர் பேசுவதாக
குறிப்பிடப்படாத நிலையில், திடீரென அவர் எழுந்து வந்து, தலைமை
நீதிபதியின் கோரிக்கைக்கு பதிலளித்தார்.
அவர் பேசுகையில், ''1987ம் ஆண்டிலிருந்து பலமுறை ஏற்பட்ட தடைகளால் தலைமை
நீதிபதியின் வலியை என்னால் உணர முடிகிறது. அரசியலமைப்பு தடைகள் எந்த
பிரச்னையையும் ஏற்படுத்தாத பட்சத்தில், உயர் அமைச்சர்களும், உச்ச
நீதிமன்ற மூத்த நீதிபதிகளும் ஆலோசனை நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண
நடவடிக்கை எடுக்கப்படும். சாமானிய மக்கள் நீதித்துறையின் மீது
வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்குமாறு அரசு நடந்து கொள்ளாது'' என உறுதி
அளித்தார் இதனை தொடர்ந்து அங்கு இயல்பான சூழல் உருவானது.
காலியாக உள்ள நீதிபதிகள் பதவியிடங்கள் ஒரு பார்வை
நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் 443 நீதிபதி பணியிடங்கள் காலியாக
உள்ளன. இவற்றில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 38 நீதிபதி பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளன என்று புதிய புள்ளிவிவரத்தின் மூலம் தெரிய
வந்துள்ளது.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள்
குறித்த புள்ளி விவரங்களை சமீபத்தில் மத்திய சட்டத் துறை அமைச்சகம்
சேகரித்தது. இதில், உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதி பணியிடங்களும்
நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 443 நீதிபதி பணியிடங்களும்
காலியாக உள்ளது தெரிய வந்துள்ளது.
நாட்டில் மொத்தம் உள்ள 24 உயர் நீதிமன்றங்களில் 1,044 நீதிபதி
பணியிடங்கள் உள்ளன. ஆனால், கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி 601
நீதிபதிகள்தான் உயர் நீதிமன்றங்களில் பணிபுரிகின்றனர். அலகாபாத் உயர்
நீதிமன்றத்தில்தான் நாட்டிலேயே அதிகபட்சமாக 86 நீதிபதி பணியிடங்கள்
காலியாக உள்ளன. அதற்கடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் 38 நீதிபதி
பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60-ல் இருந்து 75 ஆக கடந்த
ஆண்டு டிசம்பர் 21-ம் தேதி முதல் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை மற்றும் பஞ்சாப் உயர் நீதிமன்றங்களில் தலா 35 நீதிபதி பணியிடங்கள்
நிரப்பப்படாமல் உள்ளன.
உச்ச நீதிமன்றத்தை பொறுத்த வரையில் 31 நீதிபதிகள் இருக்க வேண்டும்.
ஆனால், 5 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த ஆண்டு ஏப்ரல் 13-ம்
தேதியில் இருந்து அக்டோபர் 16-ம் தேதி வரை நீதிபதிகளை நியமிக்கும் எந்த
நடைமுறையும் அமலில் இல்லை. வழக்கமான கொலீஜியம் முறைக்கு பதில்,
நீதிபதிகளை நியமிக்க தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணைய சட்டத்தை ஏப்ரல்
13-ம் தேதி மத்திய அரசு கொண்டு வந்தது. இதுதொடர்பாக சர்ச்சை எழுந்ததை
அடுத்து, அக்டோபர் 16-ம் தேதி உச்ச நீதிமன்றம் அதை ரத்து செய்தது. அதனால்
நீதிபதிகள் நியமனம், பதவி உயர்வு, பணியிட மாற்றம் எதுவும் அந்த கால
கட்டத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக