தமிழக மக்களுக்கு தங்களுடைய வாழ்வாதார பிரச்னைக்காக தினசரி போராட்டம் என்பது அவர்களுடைய உயிரோடு கலந்துவிட்ட ஒன்றாகிவிட்டது.ஆனால் அந்த போராட்டத்திலேயே வாழ்க்கை கரைந்து போய்விடுமோ என அச்சத்துடன் நடமாடுகிறார்கள்.பொது வாக தமிழக நீர் நிலைகள் இப்போது தங்களது அடையாளத்தையும், வழித்தடத்தையும் விட்டு எங்கோபோய்விட்டன.மனிதர்கள் எவைகளை புணிதமாக நினைத்து தங்கள் குடும்பத்தில் ஒருவராக என நீர்நிலைகளை அழைத்து வழிபட்டார்களோ இப்போது அதுவே அவர்களை கண்ணீர் சிந்த வைத்துள்ளது. பாலாறும், தேனாறும் பாய்ந்தோடி செழிப்பாக இருந்த தமிழகம் இப்போது பாலைவனமாகிவிட்டது.ஆச்சர்யம் இப்பாலைவனத்திலும் மனிதர்கள் தங்களின் வழிபாட்டின் அங்கமாக உள்ள நீராதாரத்தை உயிர்ப்பிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.அவர்களை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நகரின் வழியாக செல்லும் பவானி ஆறுஇப்போது அசுத்தங்களின் கூடாரமாக உள்ளது.இதில் ஒருகாலத்தில வெள்ளியை உருக்கி ஊற்றினார்போல் வெள்ளை வெளேர் என்று நீர் ஆர்ப்பரித்து சென்றுள்ளது.அதில்தான் மக்கள் குளித்து, அந்த தண்ணீரை தங்களின் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தார்கள்.யார் கண்பட்டதோ காலப்போக்கில் அந்த நிலை மாறிப்போனது.தற்போது பவானி ஆறு என்று சொல்வதற்கே அச்சமாகவும், மோசமாக சேதமடைந்தும் உள்ளது என அப்பகுதி மக்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்த பவானி ஆற்றை உயிருடன் மீட்டெடுக்க காப்போம் பவானி அறக்கட்டளை எனும் அமைப்பு மற்றும் ஒத்த கருத்துடைய சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரை ஒன்று திரட்டி மாபெரும் பேரணியை சமீபத்தில் நடத்தியது.இதில்நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பவானி ஆற்றை தூய்மைப்படுத்தி உயிருடன் மீட்போம் என்று தங்களது கோரிக்கைகளை வைத்தார்கள்.
பவானி ஆற்றில் முறையான அனுமதியில்லாமல் மின்சாரம் தயாரிப்பதற்கு தடுப்பணை கட்டப்பட்டதால் அதில் தேங்கும் தண்ணீரில் இங்குள்ள சாயப்பட்டறைகளின் கழிவு நீர் அதில் வந்து கலந்து அந்த தண்ணீர் மாசுப்பட்டு சாக்கடைநீராக மாறிவிட்டது.தொழிற்சாலைகளின் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதற்கு ஏகப்பட்ட விதிமுறைகள் இருந்தும் அதை யாரும் பின்பற்றவில்லை.இதுமட்டுமல்லாமல் பவானி ஆற்றில் பல இடங்களிலிருந்து அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் , குப்பைகள், போன்றவைகள் ஆற்றுக்குள் புதைந்துள்ளதால் நீர் ஆதாரம் மாசுப்பட்டுள்ளதோடு, மண்ணின் வளத்தையும் பாழ்படுத்திவிட்டது.
இப்பகுதி மக்களுக்கு பவானி ஆற்றுப்பகுதியிலிருந்தே குடிநீர் எடுத்து விநியோகிக்கப்படுவதால் அந்த தண்ணீரும் சுகாதாரமற்ற முறையில் இருந்து மக்களுக்கு பெயரிடப்படமுடியாத புதுப்புது நோய்களையும் உருவாக்கி வருகிறது.இதை தடுக்கவும், பவானி ஆறு எப்போதும் தூய்மையாக காத்திடவும்தான் நாங்கள் அனைவரும் இணைந்து இப்பேரணியை நடத்துகிறோம் என்று கூறினார்கள்.
இதுஒருபக்கம் இருக்கும்போதே நமது அரசுகளின் அக்கரையின்மையை புரிந்துகொண்ட கேரளஅரசு அட்டப்பாடி என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே புதிய அணையை கட்டஆரம்பிக்கிறது.இது முடிவுக்கு வந்தால் பவானி ஆற்றில் சொட்டு தண்ணீர்கூட வராது.அதனை நம்பி உள்ள பல இடங்கள் பாலைவனமாகிவிடும்.இதனையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
இதுப்பற்றி மேலும் அப்பகுதியைசேர்ந்த ஒருவர் கூறும்போது பவானி ஆற்றில் எதுதான் கலக்கிறது என்பதற்கு கணக்கே இல்லை.ஆற்றில் ரசாயாணக்கழிவுகள், சாக்கடை கழிவுகள், மருத்துவமனை கழிவுகள்,மக்காத பிளாஸ்டிக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகள்,மற்றும் பிரேதங்கள் கூட அதிகமாக கழிவுகளாக இந்த ஆற்றில் வந்து கலக்கிறது.இப்படிப்பட்ட நிலையில் ஆற்றிலிருந்து எடுக்கும் தண்ணீரைத்தான் நாங்கள் குடிநீராக பருகிவருகிறோம். எங்களுடைய நிலையை பாருங்கள் என்று வருத்தமுடன்கூறினார்.
இவர்களது கோரிக்கைகளில் முக்கியமாக வைப்பது
தண்ணீர் தேக்கநிலைகளையும், கதவணைகளையும் முழுவதுமாக அகற்ற வேண்டும்.
பாதாளசாக்கடைத்திட்டத்தை விரைவாகவும், முழுமையாகவும் துவக்கிடவேண்டும்.
பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்திட வேண்டும்.
சாக்கடைக்கழிவுகள்,ரசாயாணக்கழிவுகள், மருத்துவமனைகழிவுகள் போன்ற அனைத்து தொழிற்சாலைகழிவுகளும் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.நதீர் ஆக்கிரமிப்புக்களை அகற்றிடவேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக நதீர் பயன்படுத்துவதை தடுத்திடவேண்டும்.கேரளா பவானியில் தடுப்பணை கட்ட முயற்சிப்பதை தடுப்பது உள்ளிட்ட மிக அவசியமான கோரிக்கைகளை வைத்தனர்.
இவர்களது போராட்டம் யாரோ ஒருவர் பயனடைய அல்ல.அனைவரும் நலமுடன் வாழ்வதற்காக போராடுகிறார்கள்.இவர்களைப்போல் நாளைக்கு நீங்களும் போராடும் சூழல் வரும் அந்த நாள் வெகு தொலைவில் இல்லை.இவர்களுக்கு ஒரு வாழ்த்துக்ளை கூறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக